மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 500 பலூன்கள்- திரண்ட ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள்

மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 500 பலூன்கள்- திரண்ட ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள்
மதுரை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 500 பலூன்கள்- திரண்ட  ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள்

பதவிக்காக அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளை உடைத்துவிட்டார்.

அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பின் மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது. இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமமுக தொண்டர் ஒருவர் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
மதுரை, பழங்காநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில்  500 கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் உட்பட ஓ.பி.எஸ்., ஆதரவு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக ஆர்ப்பாட்ட மேடையில் முன்னாள் எம்.பி., கோபால கிருஷ்ணன் பேசுகையில், " எடப்பாடி பழனிச்சாமி பணத்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைக்கிறார். ஒரு போதும் வெற்றி பெற முடியாது. ஆர்.கே., நகர் தேர்தல் முதல் ஈரோடு கிழக்குத் தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமிக்கு தோல்விதான் மிச்சம். எனவே அவருக்கு காலம் பதில் சொல்லும். பதவிக்காக அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளை உடைத்துவிட்டார். இதற்கு உரிய பலனை அடைவார். மேற்கு மண்டலத்தில் எடப்பாடியின் பெல்ட்டையே உருவிவிட்டனர்" என கடுமையாக சாடினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com