‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார்’ என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிவடைந்துள்ளது. மனுக்களை பரிசீலனை செய்ததில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதாக அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என, நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இன்று 22ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி இருந்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களது வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
இந்த வாதத்தின்போது ‘ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேறு யாரும் தேர்தலில் போட்டியிடாதபடி ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
மற்றபடி இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. இந்த குறிப்பிட்ட விதிகளில் விலக்கு பெற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன.
தகுதி நீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாக ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்க முடியும்? ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை. அ.தி.மு.க உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்ப பெறத் தயார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார். தொண்டர்களே முடிவெடுக்கட்டும்’ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தால் அ.தி.மு.க விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது தரப்பு கோரிக்கையை ஏற்கப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் நீக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.