சட்டசபையில் மட்டுமல்ல. வெளியிலும் ஜனநாயகம், அரசியல் நாகரீகம் காக்க வேண்டும்
தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தி.மு.க. 133 உறுப்பினர்கள், அ.தி.மு.க. 66, காங்கிரஸ் 18, பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா 4, சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் சார்பில் தலா 2 , பா.ம.க. தரப்பில் 5 என மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் தி.மு.க. அரசால் நேற்று முன்தினம் பொது பட்ஜெட்டும், நேற்று வேளாண்மைக்கு என தனிபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று யுகாதி பண்டிகை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை. நாளை முதல் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசை விமர்சித்தால் அமைதியாக இருக்க வேண்டும்" என தங்களது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், "தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது.
இந்த 3 வருடத்தில் 3 பட்ஜெட்டை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். முதல் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட், அடுத்து முழு பட்ஜெட், தற்போது முழுபட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்றம் என்பது பொதுமக்கள் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதற்கான மிகச்சிறந்த இடம். ஆளும் அரசு திட்டத்தை அறிவித்துவிட்டு, அதை செயல்படுத்துவதற்கு முன்பே, அவர்களே கைதட்டிவிட்டி போவதற்கு அல்ல.
உதாரணத்திற்கு, குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் தி.மு.க. தெரிவித்தது. இப்போது, தகுதியானவர்களுக்கு என்கின்றனர். கேட்டால், இன்னும் வழிகாட்டுதல் நெறிமுறைகளே அமைக்கவில்லை என்கின்றனர். அதுவும் செப்டம்பர் 15ம் தேதி செயல்படுத்தப்படும் என்கின்றனர்.
ஒரு திட்டம் 6 மாதத்திற்கு பிறகு செயல்படுத்துவதற்கு எதற்கு இப்போது அறிவிக்க வேண்டும். எனவே, இதுபோன்ற திட்டங்களில் மக்களின் மனநிலை என்பதை நாங்கள் எடுத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்கினால் மட்டுமே, அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவான, உண்மையான தகவல்கள் வெளியே வரும். இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சிகளை ஆக்கப்பூர்வமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஆனால், தற்போது. தமிழக சட்டமன்றத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சி உறுப்பினர்களின் புகழுரை அளவுக்கு அதிகமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனவே, முதல்வரின் அறிவுரை, வெற்று அறிவுரையைாக இல்லாமல், அதை தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நடத்திக்காட்ட வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகீறீர்கள்? என தி.மு.க. சட்டமன்றக் கொறாடா கோவி.செழியனிடம் விளக்கம் கேட்டபோது, "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று கலைஞர் எப்படி நினைத்தாரோ அதுபோல, ஜனநாயகம் செழிக்க வேண்டும் என நினைப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின்.
இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கண்ணியம் மிக்க வகையில், சட்டசபை செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார்.
இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்ற மன்றங்களுக்கும் முன்உதாரணமாக திகழ வேண்டும் என நினைக்கிறார். அத்தோடு, அதனை செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியோடுதான், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆவேசமாக கேள்வி எழுப்பலாம் அல்லது அரசியல் நோக்கோடு கேள்வி எழுப்பலாம். எப்படி அவர்கள் கேள்வி எழுப்பினாலும், அதற்கு மூத்த அமைச்சர்கள், புள்ளி விவரங்களோடு விளக்கம் அளிப்பார்கள்.
அவர்களும் விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்துக்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார். எனவே, 'தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் அமைதி காக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன் மறைந்தபோது, ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு பேருக்கும் மத்தியில் நின்று, கட்சி பேதமின்றி மறைந்த தலைவனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியவர்தான் எங்கள் தலைவர் ஸ்டாலின்.
எங்கள் தலைவர், முன்னாள் முதல்வர் யாரும் கலைஞர் மறைவுக்கு மூத்த அ.தி.மு.க. தலைவர்கள் மரியாதைக்குகூட வரவில்லை. ஆனால், அரசியலில் நாகரீகம் வேண்டும் என்பதை பேச்சளவில் மட்டுமல்லாமல் செயல் அளவிலும் செய்து காட்டியவர் இன்றய முதல்வர் ஸ்டாலின்.
சட்டசபையில் மட்டுமல்ல, வெளியிலும் ஜனநாயகம், அரசியல் நாகரீகம் காக்க வேண்டும் என செயல்படும் தலைவர் ஸ்டாலினை பார்த்து அ.தி.மு.கவினர் இப்படி பேசுவதை அவர்களது மனசாட்சியே ஏற்காது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
- கே.என்.வடிவேல்