ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 15ம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எக்ஸ்பிபி வகை கொரோனா பாதிப்புடன், நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் போனதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது ‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுகூட அவரிடம் பேசினேன்.
டெல்லி சென்று வந்தபோது அங்குள்ள மாசு காரணமாக அவருக்கு லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மற்றபடி நலமுடன் உள்ளார்’ என, கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.