உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார்.
தனியார் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பான ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியான 'அசத்தப்போவது யாரு?. இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த குணாவும் பங்கேற்றார். தனது அசத்திய திறைமைகளால் ரசிகர்களை கவர்ந்த இவர், காமெடியில் மட்டுமின்றி, மிமிக்கிரி செய்வதிலும் திறமையானவர்.
சிவாஜி, ரஜினி, கமல், கவுண்டமணி என நடிகர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவைகளின் குரல்களை வைத்து மிமிக்கிரி செய்து வந்தார். கோவையை சேர்ந்த இவர் பல கனவுகளோடு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியை தொடர்ந்து மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோவான 'கலக்கப்போவது யாரு?'-விலும் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிட்ச் சென்றார். இதையடுத்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், அண்மைக்காலமாக உடல் மெலிந்து காணப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.