தமிழக வேளாண்மை பட்ஜெட் - மன நிறைவைத் தருகிறதா? விவசாயிகள் சொல்வது என்ன?

தமிழக வேளாண்மை பட்ஜெட் - மன நிறைவைத் தருகிறதா? விவசாயிகள் சொல்வது என்ன?
தமிழக வேளாண்மை பட்ஜெட் -  மன நிறைவைத் தருகிறதா? விவசாயிகள் சொல்வது என்ன?

இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட்,  விவசாயிகளுக்கு மனநிறைவைத் தருகிறதா? பட்ஜெட் குறித்து விவசாயிகள் சொல்வது என்ன? என்பது குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, பொதுநிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

இந்நிலையில், நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கை முழுமையாக ஏற்கப்பட்டு, அதன்படி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? என்றும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மன நிறைவை தருகிறதா? என அனைத்து விவசாயிகள்  சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டபோது, "நான் விவசாய சங்க நிர்வாகிகளுக்காக டெல்லியில் போராட்ட களத்தில் உள்ளேன். 

இருந்தாலும், தமிழ்நாட்டு பட்ஜெட் குறித்து விவசாய பிரதிநிதிகள் மற்றும் நண்பர்கள் மூலம் தகவலை அறிந்து கொண்டேன். 

அந்த வகையில், தி.மு.க. அரசு கரும்புக்கு மட்டும் 125 ரூபாய் விலை கொடுத்துள்ளனர். வாழைக்கு ஒரு சிறப்பு மண்டலம் அறிவித்துள்ளனர். நெல்லுக்கு விலை அறிவிக்கவில்லை.

இந்த ஆண்டு வாழைக்கு சிறப்பு மண்டலம். கடந்த ஆண்டு சிறுதானியத்திற்கு சிறப்பு மண்டலம். கரும்புக்கு சிறப்பு மண்டலம், காய்கறிக்கு சிறப்பு மண்டலம் என அறிவித்தனர். அறிவிப்புகள் மட்டுமே வருகிறது. ஆனால், திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இல்லை.  

தேர்தல் அறிக்கையில் கொடுத்தபடி, நெல்லுக்கு 2,500ம், கரும்புக்கு 4,500ம் கொடுக்க மறுக்கிறார்கள். விவசாயிகளின் அடிப்படையான சந்தைப்டுத்த உத்தரவாதம் கிடையாது. 

எல்லாமே அறிவிப்பாக செல்கிறது. நிதி ஆதாரம் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் கருத்து மட்டும் கேட்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். அதை செயல்படுத்துவதில்லை. கவர்ச்சிகரமாக விளம்பரம் தேட முயற்சி செய்கின்றனர். 

இது வெற்று பட்ஜெட், காகித பட்ஜெட். தி.மு.க. அரசு தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை" என விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக தி.மு.க. டெல்லி சிறப்பு பிரநிதியும், தி.மு.க. விவசாயப் பிரிவு செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயனிடம் விளக்கம் கேட்டபோது, "விவசாயிகளுக்கு எப்போது பிரச்சனை என்றாலும், முதலில் குரல் கொடுப்பதும், அவர்களுக்காக களத்தில் நிற்பதும் தி.மு.க. 

உதாரணத்திற்கு, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களுக்காக குரல் கொடுத்தது தி.மு.க. மட்டுமே.

தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் போட்டது தி.மு.க. அரசுதான். கடந்த வருடம் மட்டும் 38 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தற்போது அரசு கடுமையான நிதிநெருக்கடியிலும் விவசாயத்திற்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 

நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை என கொண்டு வந்ததே கலைஞர்தான். 

மத்திய அரசு வழங்கும் ஆதார விலையைவிட ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என கலைஞர் கொண்டு வந்தார். அது தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. 

இந்த வருடம் கூட 75 ரூபாய் முதல் 100 ரூபாய் உயர்த்தியுள்ளனர். தேர்தலில் சொன்னபடி கரும்புக்கும், நெல்லுக்கும் விலை உயர்த்திக் கொடுக்கப்படும். 

அதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் கூறுவதுபோல், 4,500 ரூபாய் என சொல்வில்லை. நெல்லுக்கு 2,500ம், கரும்புக்கு 4,000 மட்டுமே சொன்னோம். 

நிதி நெருக்கடி காலகட்டத்திலும் விவசாயிகளின் உணர்வுகளை அறிந்து புரிந்து அவர்களுக்கான திட்டங்களை ஏனோ தானோ என்று இல்லாமல் திட்டமிட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். 

இது கடைக்கோடியில் உள்ள விவசாயிகளுக்கும் தெரியும். உண்மையில் மற்ற மாநிலங்களை ஓப்பீடு செய்தால், தமிழகம் எல்லாவற்றையும் விட முதன்மையாக உள்ளது என்பதே உண்மை" என்றார்.

- கே.என்.வடிவேல்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com