கன்னியாகுமரி: அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் - சிக்கலில் பாதிரியார் ஆன்டோ

கன்னியாகுமரி: அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் - சிக்கலில் பாதிரியார் ஆன்டோ
கன்னியாகுமரி: அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் - சிக்கலில் பாதிரியார் ஆன்டோ

பாதிரியார் ஆன்றோவுக்கு எதிராக பல பெண்கள் புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுக்கடுக்கான பாலியல் புகார்களில் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான பெனடிக்ட் ஆன்றோ. குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்து வருகிறார்.  பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள திருச்சபைகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டுக்கு முன் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை திருச்சபையின் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவின. 
இப்படி பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாதிரியாரை கைது செய்ய நாகர்கோவில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் தலைமறையாக இருந்து வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கி கைதான பாதிரியார் பெனடிக் ஆன்றோவை காவல்துறையினர் ஆசாரி பள்ளத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பாதிரியார் மீது மேலும் நான்கு பெண்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் புகார் அளிப்பவர்களின் பெயர், விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் ஆன்லைன் மூலமாக கூட புகார்களை அனுப்பி வைக்கலாம் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் பாதிரியார் ஆன்றோவுக்கு எதிராக பல பெண்கள் புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com