மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளை போல் இருக்கலாம்
தமிழக சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 'மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளை போல் இருக்கலாம், அதேபோன்று, தங்க சாம்பா சாப்பிட்டால் தங்கம் போல இருக்கலாம்' என பேசியதால், அவையில் அனைத்து உறுப்பினர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-24 ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தியதை அடுத்து கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நிதி-நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, பொதுநிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது, பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளை போல் இருக்கலாம், அதேபோன்று, தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம்போல இருக்கலாம்.
இதை எல்லோரும் சாப்பிட வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு "எல்லாருக்கும் கொடுங்கள், சாப்பிடத் தயாராக இருக்காங்க" என சொல்ல, அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது. சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது.