'விவசாயிகளை ஏமாற்றிய வேளாண் பட்ஜெட்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
நெல்குவிண்டாலுக்கு ரூ.2,500 உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை
தமிழக விவசாயிகளை வேளாண் பட்ஜெட் ஏமாற்றும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட் வாசிக்கும் போது, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
தமிழக பொதுபட்ஜெட்டை நேற்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வது இது மூன்றாவது முறையாகும்.
இந்த நிலையில், தமிழக வேளாண்பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்தார்.
அப்போது, 'கரும்புக்கு ஆதார விலை உயர்தப்படும் என தி.மு.கவின் வாக்குறுதி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை' என்று குற்றம் சாட்டினார்.
அதபோல , 'நெல்குவிண்டாலுக்கு ரூ.2,500 உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை' என புகார் தெரிவித்தார்.
தற்போதைய தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள இந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்றும், வேளாண் பட்ஜெட் என்பது ஒரு மாய தோற்றம் என்றும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், 'நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய கவனம் செலுத்தவில்லை. விவசாயிகள் எதிர்பார்த்த அளவு இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை என்பதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்' என வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.