மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிவாய்ப்புகளைத் தேடவில்லை
'தமிழகத்தில், மதுக்கடைகளின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது எனக்கூறி, அதனை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வெட்கக்கேடானது' என நாம் தமிழர் கட்சியின் தலைமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், 'தி.மு.க. அரசின் 2023 -24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த நிதியாண்டில், 45,000 கோடி ரூபாய் மதுக்கடைகளின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது எனக்கூறி, அதனை 50,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்த தி.மு.க. அரசு, அவர்கள் மூலம் மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கான வழிவாய்ப்புகளைத் தேடாமல், மதுக்கடைகளையே வருவாய்க்கான முதன்மை வாய்ப்பாகக் கொண்டிருப்பது மிகமோசமான நிர்வாகச் செயல்பாடாக கருத முடியும். இந்த செயல் வெட்கக்கேடானது.
சென்னையில் மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்துவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தாளமுத்து, நடராசன் ஆகிய இருவரது நினைவு நாள் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில், மொழிப்போர் எழுச்சியைக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த தி.மு.க., இப்போதுதான் அவர்களுக்கு நினைவிடம் கட்ட முயற்சி செய்வது வரலாற்றுப் பேரவலம் ஆகும்.
மேலும், ஆதித்திராவிடர், பழங்குடி, மலைவாழ் மக்கள் நலனுக்கு கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 5,090 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 3,500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதும், நிதிப்பற்றாக்குறை குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், மாநிலத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதும் கவலை அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.