அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்க தடை - ஓபிஎஸ் தரப்பு வழக்கில் நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்க தடை - ஓபிஎஸ் தரப்பு வழக்கில் நீதிமன்றம் அதிரடி

அ.தி.மு.கவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலின் எதிரொலியாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி  தேர்வு செய்யப்பட்டார். 

இதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். இதை கண்டித்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் வரை சென்று முறையிட்டார். 

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்ததும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர். இதில் மனோஜ் பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடினார்.  

அப்போது வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம். ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 

தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது. தலைமை கழக நிர்வாகியாக இல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை மனுதாக்கல் முடிவு என்று அவசரம் காட்டியுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? 

நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? 

ஓரிரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு அது வரை பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று, உத்தரவிட வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என, அவர் வாதாடினார்.

இதன் பிறகு வைத்திலிங்கம் சார்பில் மூத்த வக்கீல் மணிசங்கர் வாதாடினார். அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிப்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம். 

அதற்குள் பொதுக்குழு வழக்கை விசாரிக்கலாம். நாளை ஒரே ஒரு வேட்பு மனுதான் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வெற்றி என்று சொல்வார்கள். பொதுச்செயலாளர் தேர்தலில் வேறு யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர் என அவர் வாதாடினார். 

ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதாடினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் கொடுக்காமல், கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் நடத்துவது தவறு. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டப்படி உள்ளது. எனவே பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு உயர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவது போலாகும் என, வாதாடினார்.

இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம் வாதாடினார். அப்போது 1.65 கோடி அ.தி.மு.க உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களுடைய ஆதரவும் இவர்களுக்கு இல்லை. 

கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் தேர்தல் முடிந்த பின்னர் வழக்கு தொடரலாம். 

இந்த 3 பேரும் கட்சி உரிமையை இழந்தவர்கள். 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இந்த கட்சி அஸ்திவாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே எங்களை வெளியேற்றி விட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என மனுதாரர் கூறுவது தவறு. 

ஓ.பி.எஸ் தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். கட்சியில் ஓ.பி.எஸ்க்கு 1 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு கூட இல்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே உறுப்பினர் பதவி உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என, அவர் வாதாடினார். 

இதன் பின்னர் அ.தி.மு.க சார்பில் வக்கீல் விஜய நாராயணன் வாதாடினார். அப்போது பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு 4 முறை உயர்நீதிமன்ற தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிசன் பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்துள்ளது. 

2017ம் ஆண்டிலும் இது போன்ற நிலை வந்தது. அப்போதும் பலர் வழக்கு போட்டனர். பொதுக்குழுவே இறுதி முடிவு எடுத்தது. 23.6.2022 பொதுக்குழு கூட்டத்துக்கு இருவரும் கையெழுத்திட்டனர். ஆனால் 11.7.2022 பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. 

2017ம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை 1.50 கோடி தொண்டர்கள் உருவாக்கினர். அதை மீற முடியாது என கூற முடியாது. பொதுக்குழு சர்வ அதிகாரமும் கொண்டது. கட்சி விதிகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். சூழ்நிலை மாறியதால் விதிகள் திருத்தப்பட்டன. 

இதன் மூலம் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது. கட்சி விதி தெளிவாக உள்ளது. விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் கட்சி செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். 

இரட்டை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் விதமாக திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. அடுத்த தேர்தலுக்கு முன்பாக திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் வரும் பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட முடியாது என, வாதாடினார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இப்போது என்ன அவசியம்? பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

அந்த வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்கும் இந்த வழக்கையும் சேர்த்து விசாரித்தால் என்ன? பொதுச்செயலாளர் பதவிக்கு ஒரு வேட்புமனு மட்டும் தாக்கல் செய்திருப்பதால் இன்றே முடிவை அறிவிக்க முடியும். 

எனவே முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தால் என்ன?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், ‘தேர்தல் முடிவை அப்படி நிறுத்தி வைக்க முடியாது. இது உள்கட்சி விவகாரம்’ என்றனர். 

இதையடுத்து நீதிபதி குமரேஷ்பாபு, ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறேன். 

இந்த வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22ம் தேதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும். 

இந்த 2 வழக்குகளிலும் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். எனவே 24ம் தேதி வரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது’ என உத்தரவிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்