அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையா? ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு இன்று அவசர விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையா? ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு இன்று அவசர விசாரணை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இதன் ஒரு பகுதியாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்டது. 

இதை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கையே ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று 18ம் தேதி தொடங்கி இன்று 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

முன்னதாக வேட்புமனுவுக்கான கட்டணம் ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள் என 20 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர். 

அதிமுக பொதுச்செயலாளர்பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் பொன்னையன், கே.பி.முனுசாமி, கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக அவசர வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்களது வழக்கறிஞர்கள் முறையிட்டனர். 

இந்த கோரிக்கையை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார். 

அதன்படி, இந்த வழக்கை நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்