'அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா' - அண்ணாமலை பேசியது உண்மையா?

தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை, அமைந்தகரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்று வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது பூத் கமிட்டி அமைப்பது, கட்சிக்கு நிதி வசூலிப்பது ஆகியவை குறித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஊடகங்களில் வெளியாகி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டும் தான் கட்சியை வளர்க்க முடியும். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன். கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ம் தேதி வரை தீவிர கட்சி பணிகளில் இருப்பேன்.
வரும் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்கிற முடிவு எடுத்தால் நான், எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணிகளை செய்வேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இதனால் ஆலோசனை கூட்டத்தில் திடீரென பரபரப்பும் பெரும் சலசலப்பும் ஏற்பட்டது. அதே சமயம் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணாமலை கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ , ‘கட்சியின் மைய குழுவில் பேச வேண்டிய கருத்தை இங்கு பேச வேண்டாம்’ என கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
இவ்வாறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் காந்தி, சரஸ்வதி, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து குமுதம் இணைய தளத்துக்காக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, ‘எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நாங்கள், எது குறித்து வேண்டுமானாலும் விவாதம் செய்வோம்.
அப்படி இருக்கும்போது யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிடுவது, கருத்து சொல்வது எல்லாம் தேவையற்ற செயல் என நான் கருதுகிறேன். ஒரு சில ஊடகங்கள் திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி செய்தி வெளியிடும்போது அதற்கான விளக்கத்தையோ, ஏற்பையோ அல்லது மறுப்பையோ தெரிவிப்பது அவசியம் இல்லை’ என, நாராயணன் திருப்பதி கூறினார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
