தி.மு.க தலைமையின் அதிரடி நடவடிக்கையை தாக்குதலில் ஈடுபட்ட உடன்பிறப்புகள் எதிர்பார்க்கவில்லை
திருச்சியில் கே.என்.நேரு-திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளது, தி.மு.க. தலைமை.
திருச்சி எஸ்பிஐ காலனியில் இறகுப் பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக இன்று (மார்ச் 15) அமைச்சர் நேரு வந்திருக்கிறார். அப்போது அமைச்சர் நேருவுக்கு திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் சிலர் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர். இதனால் கோபப்பட்ட நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதன் பின்னணியை விசாரித்தபோது, குடியிருப்புப் பகுதிகளில் மேம்பாட்டுக்காக விளையாட்டு மைதானம், பூங்கா, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது ஆகிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சி சார்பில் ஒரு பங்கு நிதி வழங்கப்படுகிறது. அதன் ஓர் அங்கமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை திறந்து வைப்பதற்காக நேரு வந்திருக்கிறார்.
இந்த மைதானம் அமைந்துள்ள கன்டோன்மென்ட், சங்கம் ஹோட்டல் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில்தான் திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. ஆனால், விழா அழைப்பிதழிலோ கல்வெட்டிலோ சிவா பேர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரப்பட்ட சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர்.
வழக்கமாக பொது இடங்களில் கோபத்தைக் காட்டும் அமைச்சர் கே.என்.நேரு, இந்தச் சம்பவத்தால் மேலும் கொந்தளித்தார். இறகுப் பந்து மைதானத்தைத் திறந்து வைத்துவிட்டு அவர் கோபமாகக் கிளம்பிவிட்டார்.
இதன்பின்னர், தி.மு.க-வினர் சிலர் திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து ஜன்னல், நாற்காலி, வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தொடர்ந்து, செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்திலும் இரு தரப்பும் மோதிக் கொண்டது. ஆனால், இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது திருச்சி சிவா வீட்டில் இல்லை. அவர் டெல்லியில் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கும்போதே, 'யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுங்கள்' என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
அடுத்தகட்டமாக, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், திருச்சி மாவட்ட தி.மு.க. பொருளாளர் துரைராஜ் மற்றும் 55-வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்து, பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
'தி.மு.க தலைமையின் அதிரடி நடவடிக்கையை தாக்குதலில் ஈடுபட்ட உடன்பிறப்புகள் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் திருச்சி மாவட்ட தி.மு.க-வினர்.