சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதிக்கமுடியாது
தமிழகத்தில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களை முறைப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை நடைபெற இருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி மறுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. எனவே, அவர்களது வருகையை முறைப்படுத்தி, அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்கவேண்டும்.
அதேபோல, கோவை வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தொடங்கி காயல்பட்டினம் வரை பேரணி செல்லவும் , மாலையில் அங்கு பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்கக்கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தோம்.
ஜனவரி மாதம் இந்த நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தால், அந்த நிகழ்வை வரும் 18ம் தேதி அன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழக்கி உத்தரவிடவேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தமனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்குவந்தது. அப்போது, அரசு தரப்பில், " நா.த.க. பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகொடுத்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே, இதற்கு அனுமதிக்கமுடியாது" என வாதிட்டப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "வட மாநில தொழிலாளர் பிரச்சினை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமிழ்நாடு அரசின் வரன்முறைக்குள் வராது" எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.