"எங்கள் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்" என இரண்டு கட்சி முன்னணி நிர்வாகிகள் கருத்து
பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய 3 மாநிலத்தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. அதற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அண்மையில் நடைபெற்ற "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ.கவினரால் அ.தி.மு.க. 42 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டோம்" என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேபோல, பா.ஜ.க. ஐ.டி விங் மாநிலத் தலைவர் சி.டி. நிர்மல்குமார், அண்மையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அவரைத்தொடர்ந்து பா.ஜ.கவைச் சேர்ந்த பல்வேறு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.கவில் இணைந்து வருகின்றனர். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை திடீரென சந்தித்துப் பேசினார். இதனால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சந்திப்பு சுமார் 10 முதல் 15 நிடங்கள் வரை இருந்ததாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய 3 மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அமோக வெற்றி பெற்றதற்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளதாக" அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும், அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் "எங்கள் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்" என இரண்டு கட்சி முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.