சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தியுள்ளதால் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யவேண்டும் என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ஜ.கவினர் புகார் அளித்துள்ளனர்.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.கவினர் மீது கடும் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, "தி.மு.க. ஆட்சி மீது பா.ஜ.கவினர் கைவைத்தால், உயிரோடு இருக்கமுடியாது" என அவர் பேசியதாக பா.ஜ.கவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு சார்பில், அதன் துணைத்தலைவர் மணி, தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், "தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியுள்ளதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.