திருச்சியில் அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள், எம்பி திருச்சி சிவாவின் வீட்டைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, கன்டோன்மெண்ட் பகுதியில் புதிய விளையாட்டு மைதான திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பெயர் மட்டும் இருப்பதாக எம்.பி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
திமுகவின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் திருச்சி சிவா. அதே போல், திமுகவின் மூத்த தலைவரும், தமிழக அமைச்சருமாக உள்ளவர் கே.என்.நேரு. இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இன்று திருச்சி கன்டோன்மென்ட், ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒன்றை திறப்பதற்கு வந்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு. அதே காலனி பகுதியில்தான் திமுகவின் மாநிலங்களவை எம்.பி சிவாவின் வீடும் அமைந்துள்ளது. நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், விளம்பரம், பிளக்ஸ், திறப்பு விழாவிற்கான கல்வெட்டு என எதிலுமே திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
இன்று விளையாட்டு பூங்கா திறப்பு விழா என்பதால், சிவாவின் ஆதரவாளர்கள், கருப்பு- சிவப்பு திமுக கொடியில் கருப்பு பகுதியை மட்டும் தனியே கிழித்து எடுத்து நேருவின் கார், திருச்சி சிவாவின் வீடு அருகே வரும்போது குறுக்கே போய் கருப்புக் கொடி காட்டினர். நேருவின் கார் தாண்டி போய்விட, பின்னால் வந்த அவரது ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியவர்களை அடித்து வீட்டுக்குள் துரத்தினர். அதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்குள் புகுந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவாவின் பார்ச்சுனர் கார், இரண்டு பைக்குகள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் சிவாவின் வீட்டின் மாடியில் ஒளிந்திருந்த ஐந்து பேரைப் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து, திருச்சி சிவா ஆதரவாளர்கள் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி சிவா வீட்டில் இருந்த கார்- பைக்குகளை தாக்கி சேதப்படுத்திய நேருவின் ஆதரவாளர்கள் யார் என்பது குறித்தும் விசாரனை நடைபெற்று வருகிறது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர், எம்பி இருவரின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.