வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு இந்திய நாடாளுமன்றம் குறித்து தவறாக பேசுகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி எம்.பி.,யான பாஜகவின் பிரக்யா சிங் தாக்கூர், அடிக்கடி சர்ச்சைக்குள்ளாவது வழக்கம். முன்பு காந்தியை கொன்ற கோட்சேதான் தேசபக்தர் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், இவர் தற்போது ராகுல் காந்தி குறித்து பேசிய கருத்து கூறி இருப்பது பரபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்கு சென்ற ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து பேசி புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தன்னை பேச விடாமல் அடிக்கடி மைக்கை ஆஃப் செய்வதாக ராகுல் புகார் தெரிவித்தார்.
இதற்கு பிரக்யா சிங் தாக்கூர், "வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த குழந்தை தேச பக்தி கொண்டவராக இருக்க முடியாது என சாணக்கியர் கூறியுள்ளார். அதை ராகுல் காந்தி நிரூபித்து வருகிறார். ராகுலின் தாய் இத்தாலியில் பிறந்ததால் ராகுலை இந்தியராக கருத வேண்டாம். இந்திய தலைவராக இருக்கும் ராகுலை மக்கள் வாக்களித்து எம்பியாக தேர்வு செய்துள்ளனர். ஆனால், அவரோ வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு இந்திய நாடாளுமன்றம் குறித்து தவறாக பேசுகிறார். இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதும் இல்லை. இனி அவருக்கு மக்கள் அரசியல் வாய்ப்பு தரவே கூடாது. அவரை நாட்டை விட்டே தூக்கி எறிய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.