கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க. ஐ.டி. கோட்டப்பொறுப்பாளர் பாக்கியராஜ் ராஜினாமா
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் இருக்கும்போதே, அக்கட்சியில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ.க. ஐ.டி. கோட்டப்பொறுப்பாளர் பாக்கியராஜ், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகம் வந்தார். அப்போது அவர் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள பா.ஜ.கவின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்துப்பேசினார். அப்போது, "நாட்டில் மாநிலக்கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. பெரும்பாலான மாநிலக்கட்சிகள் எல்லாம் குடும்ப ஆதிக்கத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. ஆனால், பா.ஜ.கவில் வாரிசு அரசியல் இல்லை, குடும்ப அரசியல் இல்லை. எங்கெல்லாம் குடும்ப அரசியலும், குடும்ப ஆட்சியும் உள்ளதோ அதற்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்து வருகிறது " என்று மாநிலக்கட்சிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.
ஆனால், ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரியில் இருக்கும் போதே, தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கோட்டப் பொறுப்பாளர் பாக்கியராஜ், "நான் பா.ஜ.கவில் இருந்து மகிழ்ச்சியுடன் விலகுகிறேன். சி.டி. நிர்மல்குமாரின் வழியில் அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளேன்" என ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவும், ஜே.பி.நட்டா கிருஷ்ணகிரியில் இருக்கும்போது, அவரது இந்த ராஜினாமா திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜ.கவினர் கொந்தளித்தனர்.
இந்த நிலையில், பா.ஜ.க. உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. - அ.தி.மு.க. மோதல் குறித்தும், பா.ஜ..க நிர்வாகிகள் விலகல் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி பா.ஜ.க. ஐ.டிவிங்கில் இருந்து விலகிய பாகியராஜை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து, அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "அவரது அறிக்கைதான், அவரது பதில். அதையே பதிலாக போட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. ஐ.டி விங்கில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள், இது கட்சி வளர்ச்சியை பாதிக்காதா? என விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டுப்பிரிவு மாநில துணைத் தலைவர் அக்னி ராஜேஸிடம் கேட்டபோது, பா.ஜ.கவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, ஓ.பி.சி. அணி என 5 அணிகள் உள்ளன. இந்த 5 அணிகள்தான் வலிமையானவை. அதில் 28 பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஐ.டி விங்.
சி.பி.ஆருக்கு பாராட்டு விழா நடத்திவிட்டு, அண்ணாமலை கர்நாடகா தேர்தல் தொடர்பாக டெல்லிக்கு மிக அவசரமாக செல்லவேண்டி இருந்தது. அதனால், அவருக்கு வெறும் 10 நிமிடம்தான் டைம் இருந்தது. அந்த நேரத்தில், ஐ.டிவிங்கையும், திறன் மேம்பாட்டுப் பிரிவையும் இணைத்து மீட்டிங் நடந்தது.
அதில்தான், "தமிழக ஐ.டி. விங் செயல்பாடு சரியில்லை என டெல்லியில் இருந்தே ரிப்போர்ட் வந்துவிட்டது. ஒரு மாதம் டைம் தருகிறேன். திருந்திவிடுங்கள். இல்லையெனில் விலகிவிடுங்கள்" என சி.டி.நிர்மல்குமாருக்கு, தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்தே, அ.தி.மு.க. தலைமையுடன் பேசி வைத்துக்கொண்டு நிர்மல்குமார் அங்கு சென்றுவிட்டார்.
ஒரு பிரிவுக்குத் தலைவர் வரும்போது, அவரைச் சார்ந்தவர்களே அதிகளவு அந்த பிரிவில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். அப்படி இருக்கையில், வாரம் ஒருவர் வீதம் ராஜினாமா நாடகம் நடத்தி வருகின்றனர். ஒரு பிரிவில் ஒரு சிலர் செல்வதால், கட்சியே கலகலத்துப் போய்விட்டதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். உண்மையைச் சாெல்லப்போனால், கட்சியில் இருந்து களைகள் அகற்றப்பட்டுள்ளன என்றுதான் அர்த்தம்" என்கிறார்.
அடுத்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "பா.ஜ.கவின் சமூக ஊடகப்பிரிவின் செயல்பாடுகள் சரியில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது கருத்தை ஏற்க மறுப்பவர்களும், கட்சியைவிட்டு வெளியே செல்லவேண்டும் என நினைப்பவர்களும் வெளியே செல்கிறார்கள். அவ்வளவுதான். கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள் குறித்து நாம் கவலைப்படவேண்டியது இல்லை. பா.ஜ.கவில் இருந்து ஒரு சிலர் தான் வெளியேறுகிறார்கள். ஆனால், அதைவிட நூறு மடங்கு பலர் உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோலே வைத்துக்கொண்டாலும், அதாவது, 2 மாதம் முன்புதானே விருது வாங்கினோம் என நினைத்து அலட்சியமாக இருந்திருப்பார்கள். அதனால், அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதுதான் உண்மை" என்கிறார்.