‘ஆளுநர் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார்’- டிடிவி தினகரன்
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட விவகாரத்தில் ஆளுநர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூடியதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பிக் கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவாகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,"ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்" என தெரிவித்தார்.
மேலும், திமுக அமைச்சர்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளில் முதலமைச்சர் தைரியமாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால் தான், அவருக்கும் நல்லது, மக்கள் தேர்ந்தெடுத்த இந்த ஆட்சிக்கும் நல்லது என்றும் தெரிவித்தார்.