'தமிழ்நாட்டை ஆளும் திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது'
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரப் போகிறது என கிருஷ்ணகிரியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் நவீன முறையில் பாஜக அலுவலகம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு, தற்போது 10 அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், "9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராகப் பதவியேற்ற பின்னர், மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் வந்தார். அப்போது அவர், நாடு முழுவதும் பாஜகவிற்கு கட்சி அலுவலகங்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றைய தேசியத்தலைவர் அமித் ஷாவிடம் 887 மாவட்டங்களில் பாஜகவிற்கு நவீன முறையில் அலுவலகம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது இது போன்ற நவீன கட்டடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைப்பது என்று முடிவு செய்தோம்" என்று கூறினார்.
"550க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பாஜக அலுவலகங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கூட 14 அலுவலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் விரைவில் பாஜகவினரின் கடுமையான உழைப்பால் தாமரை மலரப் போகிறது. பாஜகவினர் நம்பிக்கையுடன் பணியாற்றினால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும். வாரிசு அரசியல், பிரித்தாளும் அரசியலில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாட்டை ஆளும் திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. ஜம்மு காஷ்மீர், பீகார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வாரிசு அரசியல் உள்ளது. மாநில கட்சிகள் எல்லாம் குடும்ப கட்சிகளாக உள்ளன" என்றும் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.