ஓடவிட்டுக் கொண்டே இருந்தா எப்படிங்க? கோவைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினால் அப்செட்டில் திமுகவினர்?

ஓடவிட்டுக் கொண்டே இருந்தா எப்படிங்க? கோவைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினால் அப்செட்டில் திமுகவினர்?
ஓடவிட்டுக் கொண்டே இருந்தா எப்படிங்க? கோவைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினால் அப்செட்டில் திமுகவினர்?

அந்த பதவியை தர்றேன், இந்த பதவியை தர்றேன்னு சும்மா அள்ளிவிட்டு ஆட்களை இழுக்கிறாங்க

’உடம்புல புண்ணு இருக்குற இடத்துல மருந்து தடவணும்தான். ஆனால், அளவுக்கு அதிகமா தடவுனா அதுவே பெரிய புண்ணை உருவாக்கிடும். அந்த கதையாகிப் போச்சு இங்கே எங்களோட கட்சியின் நிலைமை’என்று அங்கலாய்க்கிறார்கள் கோவை மாவட்ட தி.மு.க.வினர். 
என்ன பிரச்னை?
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையின் பத்து தொகுதிகளிலும் தி.மு.க. தோல்வியுற்றது. இதனால், ஆட்சி அமைந்ததும் சக்கரபாணி மற்றும்  இளித்துரை ராமச்சந்திரன் எனும் இரண்டு அமைச்சர்களை கோவையின் பொறுப்பு அமைச்சர்களாக்கினார் முதல்வர். மாவட்ட நிர்வாகத்தை கவனிப்பதோடு, கட்சியையும் வளர்க்க சொல்லி உத்தரவு. ஆனால், இருவராலும் எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. 
இதனால், கரூர் மாவட்ட செயலாளரும், மின்சார வாரியத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சராக்கினார் ஸ்டாலின். பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே தடாலடி அரசியலை துவக்கினார் செந்தில்பாலாஜி. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகரம், மாவட்டம் என அத்தனை ஏரியாவிலும் திமுக வெற்றியை அள்ளியது. மேயர், நகராட்சி தலைவர்கள் என கோவையின் எட்டு திக்கிலும் உள்ளாட்சியில் திமுகவின் கொடிதான்.
இந்நிலையில் சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் கோவை மாவட்ட தி.மு.க.வினருக்கு சில வார்டுகள் ஒதுக்கப்பட்டு வேலை சுளுக்கெடுத்தது. அந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூச்சு விடுவதற்குள்ளாக முதல்வர் பிறந்தாள் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவது பற்றி ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஆளாளுக்கு  பல வேலைகள் தரப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அதையெல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ்டாக நினைத்த நிலையில் இதோ 11ம் தேதி கோவைக்கு முதல்வர் ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருவதற்கான ஏற்பாடுகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர் நிர்வாகிகள். 
மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் முதல்வருக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் என இரண்டு மெகா நிகழ்வுகள் சனிக்கிழமை நடக்கின்றன. இதற்கான பணிகளில் கட்சியினர் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இப்படி மூச்சு விட முடியாத அளவுக்கு கட்சி வேலைகள் போட்டு உலுக்குவதால் வெறுத்துப் போயுள்ளனராம் மாவட்ட கழக நிர்வாகிகள்.
அவர்களில் சிலர் நம்மிடம் “சின்ன இடைவெளி கொடுத்து கட்சி வேலை வாங்கினா பரவால்ல, ஆனால் தூங்க கூட நேரம் கொடுக்காம ஆலோசனை, களப்பணி, ஆட்சேர்ப்புன்னு ஓடவிட்டுக் கொண்டே இருந்தா எப்படிங்க? எங்களோட பர்ஷனல் பொழப்பை பார்த்தால் தானே கையில நாலு காசு சேரும். அதுல ரெண்டை கட்சிக்கு செலவு பண்ண முடியும். லீவே விடாம தினமும் கட்சி ஆபீஸுக்கும், ரோட்டுக்கும் வந்து நில்லுன்னா எப்படி?” என்று புலம்புகிறார்கள். 
அதேபோல் அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற மாற்றுக் கட்சியினரும் திமுகவை பார்த்து மிரண்டு கிடக்கிறார்கள் ‘முதல்வர் முன்னாடி பெரிய கூட்டத்தை காட்டுறதுக்காக அந்த பதவியை தர்றேன், இந்த பதவியை தர்றேன்னு சும்மா அள்ளிவிட்டு ஆட்களை இழுக்கிறாங்க. அதிகாரத்தை காட்டி, அன்பளிப்பை கொடுத்துன்னு இவங்க போட்டி போட்டு இழுக்குறதாலே எங்களுக்கு பெரிய சேதாரமா இருக்குது” என்று கண்ணை கசக்குகின்றனர். சர்தான்!
-எஸ்.ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com