சில புகைப்படங்களை காட்டி தனது பொலிடிக்கல் ப்ளாஷ்பேக்கை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பிப்ரவரி 28ம் தேதி துவங்கியது.
இதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இதில் ஸ்டாலின் வாழ்க்கையில் நடந்த அரசியல் பரிமாணங்களை விளக்கும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதுதவிர முதல்வரின் சிறு வயது மற்றும் நடுத்தர வயது புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படங்கள் முன்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் நின்று ‘செல்பி’எடுத்துக் கொள்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அமைச்சர் உதயநிதி, நடிகர் பார்த்திபன் என தினந்தோறும் வி.வி.ஐ.பிக்கள் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மார்ச் 8ம் தேதி தனது கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிடுவதறகாக சென்ற முதல்வர் ஸ்டாலின் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது அருகில் இருந்த அமைச்சர் சேகர்பாபுவிடம், சென்னை மேயராக பொறுப்பேற்றபோது எடுத்த புகைப்படம், மாஜி மேயர் சிட்டிபாபுவுடன் நெருக்கமாக இருக்க கூடிய புகைப்படம் என சில புகைப்படங்களை காட்டி தனது பொலிடிக்கல் ப்ளாஷ்பேக்கை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். பிறகு தனது திடீர் விசிட் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் எதிலும் இடம்பெறக்கூடாது எனவும் அவர் வாய்மொழி உத்தர விட்டார்.
புகைப்பட கண்காட்சியை தி.மு.க நிர்வாகிகள் தினமும் தொண்டர்களை அழைத்து சென்று பார்வையிட்டு வருகிறார்கள். மார்ச் 10ம் தேதியுடன் புகைப்பட கண்காட்சியை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல்வரின் மனைவி துர்கா கண்காட்சியை பார்வையிட வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து, வரும் 12ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.