உருவாகும் புதிய கூட்டணி : கூட்டணியிலிருந்து வெளியேற காரணம் தேடும் திருமா?

உருவாகும் புதிய கூட்டணி : கூட்டணியிலிருந்து வெளியேற காரணம் தேடும் திருமா?
உருவாகும் புதிய கூட்டணி : கூட்டணியிலிருந்து வெளியேற காரணம் தேடும் திருமா?

திருமாவளவன் கலந்து கொண்டு கடுமையாக காவல்துறையை விமர்சித்து பேசியிருந்தார்.

திமுக கூட்டணியை விட்டு வெளியேற காரணம் தேடும் திருமாவின் செயல், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுவதற்கான அச்சாரம் என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
நாடாளுமன்றம், சட்டமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என திமுகவுடனான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் கூட கடந்த சில மாதங்களாக ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துகளை கடுமையாக பதிவு செய்து வருகிறார் திருமாவளவன். சேலத்தில் விசிக கொடிகம்பம் அமைக்க காவல்துறை அனுமதி அளித்த விவகாரத்தில், உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியது. அதில் திருமாவளவன் கலந்து கொண்டு கடுமையாக காவல்துறையை விமர்சித்து பேசியிருந்தார். 
பாஜகவிற்கு எதிராக கடந்த மாதம் விசிக சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட அமித்ஷாவின் காவல்துறையாக தமிழக காவல்துறை செயல்படுவதாக கடுமையாக சாடியிருந்தார். திருமாவின் இந்த பேச்சுக்கு காரணம், பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வருவது தான் காரணம் என விசிக தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. பாஜக - பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என பலமுறை திருமா வெளிப்படையாக சொல்லி வரும் நிலையில், திமுகவின் இந்த போக்கு விசிகவுக்கு கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அங்கு செல்லும் முடியாத நிலை விசிகவுக்கு உள்ளது.
இதன் காரணமாகவே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்ள வேண்டுமெனவும், அதுதான் அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என திருமாவளவன் கருத்து தெரிவித்து வருவது, அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்றி விட்டு, அந்த கூட்டணியில் விசிக இடம் பெற செய்வதற்கான வேலையை தான் திருமா செய்ய தொடங்கியிருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக அதற்கு அச்சாரம் போடுவிதமாக திருமாவளவின் செயல்பாடு இருப்பதாக, தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸிடம் கேட்டோம்: ’’காவல்துறையை பாஜக மிரட்டுகிறது. அதனால்தான் அமித்ஷா காவல்துறையா? என திருமா குறிப்பிட்டு பேசினார். மற்றபடி கூட்டணியில் எந்த சலசலப்போ, மனவருத்தமோ இல்லை. அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்று சொல்வது அவர்களின் நலன் சார்ந்தது மட்டும் அல்ல, மதவெறி சக்திகளிடமிருந்து தமிழகத்தை சிக்க வைத்துவிடக்கூடாது, அதிமுக துணை போய்விடக்கூடாது என்ற நல்லணத்துடன் தான்’’என விளக்கம் அளித்தார்.
- து.பாபு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com