ஆளுநரின் கடமைகள் என்ன? தமிழக அரசின் பரிந்துரைகளை கட்டாயம் ஏற்க வேண்டுமா?
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த 2022 அக்டோபர் மாதம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் :
இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்ட முன்வரைவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது.ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்தும் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இதையடுத்து, கடந்த 5 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்த ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் சட்ட முன்வரைவை அரசுக்கே திரும்ப அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், தொடரும் இளைஞர்களின் உயிரிழப்புகளை தடுக்கவும், எதிர்கால சமுதாயத்தை காப்பாற்றவும் தமிழக அரசு இயற்றிய சட்ட முன்வரைவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆளுநரின் கடமைகள் என்ன? தமிழக அரசின் பரிந்துரைகளை கட்டாயம் ஏற்க வேண்டுமா? அவருக்கான சிறப்பு அதிகாரங்கள் என்ன?
சென்னை மூத்த வழக்கறிஞர் விஜயனிடம் கேட்டபோது, இந்திய அரசியலமைப்பு ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.சில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருப்பதாக ஆளுநர் கருதி ஒப்புதல் அளிக்க மறுத்தால்,அமைச்சரவை மீண்டும் சட்ட முன்வரைவை ஆளுநருக்கு அனுப்பினால் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். மீண்டும் மசோதாவை மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
ஒருவேளை ஆளுநரின் செயல்பாடு அதிருப்தி தருவதாக மாநில அரசு கருதினால், நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் நீதிமன்றங்களும் ஆளுநரின் விளக்கத்தை கேட்குமே தவிர, ஆளுநருக்கு எதிராக உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவுகள் எதையும் பிறப்பிக்காது என கூறினார்.
சுரேஷ், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் :
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் மத்திய அரசு ஆளுநர்கள் நியமனத்தின் மூலமாக தங்கள், அதிகாரத்தை மாநில அரசு மீது மறைமுகமாக செலுத்துகிறது. அதனால், மாநில அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலதாமதம் செய்கின்றனர்.
மத்திய அரசின் பிரதிநிதியாக மத்திய அரசால் (தேர்தல் இல்லாமல்) நியமிக்கப்படும் ஆளுநர், மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுவதில் ஆச்சரியமில்லை. மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை ஒருமுறை திரும்ப அனுப்பினால், மீண்டும் பரிந்துரை செய்யப்படும் போது ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால் தான் பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சட்ட மசோதா மீது 6 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கூறினாலும், முடிவு எடுக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என்பதால், ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர் என கூறுகிறார்.