'ஆளுநருக்கு காதுகள் இல்லை' - முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்

'ஆளுநருக்கு காதுகள் இல்லை' - முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்
'ஆளுநருக்கு காதுகள் இல்லை' - முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்

"ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது"

'உங்களில் ஒருவன் பதில்கள்' என்னும் தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில் அவர், "உங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "தோள் கொடுப்பான் தோழன் என்பதன் அடையாளம் அவர்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும்,"ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே...அதற்கு மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்குச் செவி மடுப்பார்களா?" என்ற கேள்விக்கு, "இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு, காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது" எனப் பதில் அளித்துள்ளார்.

"டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாக மிரட்டுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றும், பாஜக தனது வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது என்றும் பதில் அளித்துள்ளார். மேலும் இந்த கேள்விக்கு, "பிரதமருக்கு இது சம்பந்தமாகக் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றும்,  எதிர்க்கட்சிகளைத் தேர்தல் மூலம் மட்டுமே வெல்லலாம்,விசாரணை அமைப்புகள் மூலமாக வெல்ல முடியாது" என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, "மகளிர் தினம் நேற்று நடைபெற்ற நிலையில், மகளிருக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, "மகளிர் அனைவரும் படிக்க வேண்டும், உயர்கல்விக்குச் செல்ல வேண்டும், திருமணம், குடும்பம் என்று இருந்து விடாமல் சமூக பங்களிப்பும் இருக்க வேண்டும்" என்று பதில் அளித்துள்ளார். மேலும், "பெண்களைக் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும், இது தான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை" என்று கூறியுள்ளார்.

"வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான செய்தி பரப்பப்படுகிறதே" என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு  எந்த பாதிப்பும் இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் பொய்யான வீடியோக்களைப் பரப்பியது உள்நோக்கம் கொண்டது"என்று பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com