தி.மு.க. அமைச்சர்கள், எம்.பிக்கள் சிலர் மீது அண்ணாமலை புகார்
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், விரைவில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கட்டுமானம், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து, இந்த வீடியோ போலி என்றும், இணையத்தில் வதந்தி பரப்பிய 4 பேர் மீது தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளதாக அரசு அறிவிப்பை வெளியிட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் விரிவான அறிக்கையை வெளியிட்டார்.
இந்தநிலையில், 'வடமாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர் ஸ்டாலின்?' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தி.மு.க. அமைச்சர்கள், எம்.பிக்கள் சிலர் மீது புகார் தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை வெளியிட்ட இந்த அறிக்கை வன்முறையை தூண்டுவதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மண்ணடியைச் சேர்ந்த சேர்ந்த குமரன் என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அதாவது 153, 153A (1) (a), 505 (1) (b) மற்றும் 505 (1) (c) ஆகிய பிரிவுகளின்கீழ் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, 'தமிழக அரசுக்கு தெம்பு இருந்தால், திரானி இருந்தால், என்னை கைது செய்து பார்க்கட்டும்' என அண்ணாமலை வீடியோ பதிவும் வெளியிட்டார்.
''தி.மு.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?" என தி.மு.க செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் குமுதம் இணையதளத்துக்காக பேசினோம்.
''வன்முறையை தூண்டுவது, மக்களிடையே ஜாதி, மதப் பிரச்னையை உண்டு செய்வது ஆகியவைதான் பா.ஜ.கவின் வேலை. குறிப்பாக, வடமாநிலத்தவர் விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையையொட்டி அவர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் எஃப்.ஐ.ஆர் என்று பா.ஜ.கவும் அதன் தமிழக தலைவர் அண்ணாமலையும் நினைத்துக்கொண்டு உள்ளனர். இந்த எஃப்.ஐ.ஆரை அடுத்து, விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அண்ணாமலை தவறு செய்துள்ளார் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிப்போம். தமிழக போலீசாரை சாதாரணமாக நினைக்காதீர்கள். அவர்கள் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானவர்கள் என்பதை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்'' என்றார்.
''இந்த வழக்கை பா.ஜ.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது?'' என தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் குமுதம் இணையதளத்துக்காக பேசினோம்.
'' தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற 20 மாதத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு போட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை. ஆன்லைன் லாட்டரியை தடுக்க முடியவில்லை, பெண்களுக்கு உரிய பாதுகாப்பைக் கொடுக்கமுடியவில்லை. இப்படி பல பிரச்னைகள் இருந்தாலும், 24 மணிநேரமும் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களை தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகிறனர்'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ''தற்போது எங்கள் தலைவர் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கு எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இதை எப்படிக் கையாளவேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அதை இப்போது வெளிப்படையாக சொல்லமுடியாது. வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது பாருங்கள். வழக்கு போட்டு பா.ஜ.க-வினரை முடக்க நினைத்தால் அது நடக்காது'' என்றார்.