'திருமாவளவனின் ஒப்பீடு சரியில்லை' - முற்றுகிறதா ம.தி.மு.க, வி.சி.க மோதல்?

'திருமாவளவனின் ஒப்பீடு சரியில்லை' - முற்றுகிறதா ம.தி.மு.க, வி.சி.க மோதல்?
'திருமாவளவனின் ஒப்பீடு சரியில்லை' - முற்றுகிறதா ம.தி.மு.க, வி.சி.க மோதல்?

"எங்களுக்கு யாருடையை நற்சான்றிதழ்களும் தேவையில்லை"

'ஈழத் தமிழர் விவகாரத்தில் வைகோவின் உழைப்பும் தியாகமும் உலகத்துக்குத் தெரியும். யாரும் நற்சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை' என வி.சி.க-வுக்கு பதில் கொடுத்துள்ளார், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அதில், ஈழத்தமிழர் விவகாரம் பற்றிப் பேசும்போது, 'ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக அரசியல்  தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள்' எனக் குறிப்பிட்டதாகத்  தகவல் வெளியானது. 
''திருமாவளவனின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் குமுதம் இணைய தளத்துக்காகப் பேசினோம்.
''ஈழவிவகாரத்தில் பல தியாகங்களைச் செய்தவர் வைகோ. அதனால், ம.தி.மு.க. இழந்ததை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அதை நாங்கள் இழப்பாக நினைக்கவில்லை. அதை வைகோவின் தியாகமாகவும்  பெருமையாகவும் பார்க்கிறோம். எதில் வேண்டும் என்றாலும் தலைவர் வைகோ சமரசம் செய்துகொள்வார். ஆனால், இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை.
ஈழவிவகாரத்திலும் சரி, முள்ளிவாய்க்கால் விவகாரத்திலும் சரி, பொத்தாம் பொதுவான நபர்களுடன் வைகோவை, திருமாவளவன் ஒப்பிட்டதை எங்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜீரணிக்க முடியவில்லை. அதன் மனக்குமுறல்தான் ம.தி.மு.க. சார்பில் அறிக்கையாக வெளிவந்தது.
திருமாவளவன் கூறியது பொதுவெளியில்தானே. அதனால்தான் நாங்களும் அதற்கு பொதுவெளியில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம்'' என்கிறார். 
தொடர்ந்து பேசுகையில், ''அறிவார்ந்த உலகில் வைகோவை புறக்கணிப்பதால், யாருக்கு நஷ்டம் என்பதை நாடு அறியும். எங்களுக்கு யாருடையை நற்சான்றிதழ்களும் தேவையில்லை. கடந்த காலங்களில் திருமாவளவன் பேசும்போது, 'என்னை கலைஞரிடம் அறிமுகம் செய்து வைத்ததும் வைகோதான், ஈழ உணர்வை ஊட்டியதும் வைகோதான்' என தெரிவித்தது நினைவில் உள்ளது. 
கூட்டணிக்குப் பாதகம் வரும் அளவுக்கு யாரும் கருத்துகளை தெரிவிக்கவில்லை. வைகோவை களங்கப்படுத்தும் நோக்கம் திருமாவளவனுக்கு இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நாங்களும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கவேண்டும் என்று நினைத்துத்தான் செயல்பட்டு வருகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்ட சகோதரர்களாக திருமாவும், வைகோவும் உள்ளனர். ஆனால், எதற்காக இப்படி திருமா சொன்னார் என தெரியவில்லை'' என்கிறார். 
இதுகுறித்து, வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். ''தமிழக தலைவர்கள் சிலர் மீது ஈழத்தில் உள்ளவர்களுக்கு குறைவான நம்பிக்கை உள்ளது என்று சொன்னது உண்மைதான். ஆனால், யார் பெயரையும் குறிப்பிட்டு எங்கள் கட்சித் தலைவர் திருமா பேசவில்லை. இதற்கு ம.தி.மு.கவினர் வினையாற்றியுள்ளனர். அந்த அறிக்கை வைகோ மற்றும் துரை.வைகோ ஆகியோரின் அனுமதியோடு வெளியானதா அல்லது தனிப்பட்ட அறிக்கையா எனத் தெரியவில்லை'' என்கிறார். 
மேலும், ''ஈழ விவகாரத்தில் சில இயங்கங்கள் நாங்கள்தான் அத்தாரிட்டி என்று சொல்கின்றனர். அதனை உடைக்கும் வகையில்தான் திருமா அப்படிச் சொன்னார். தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லவில்லை. குறிப்பாக, எந்த இடத்திலும் வைகோ பெயரை உச்சரிக்கவில்லை'' என்கிறார்.
''ம.தி.மு.க-வினரின் மனநிலையில் இருந்து பார்த்தால் அது நியாயமாகவே தோன்றும். ஆனால், அவர்கள் வருத்தப்படும் அளவுக்கு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. தி.மு.க கூட்டணி மிகவும் பலமாகவே உள்ளது. எங்களுக்கு வைகோ மற்றும் துரை.வைகோ மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது" என்கிறார், எஸ்.எஸ்.பாலாஜி.
- கே.என்.வடிவேல்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com