அ.தி.மு.க-வில் ஐக்கியமான அடுத்த பா.ஜ.க நிர்வாகி - மோதல் முற்றுகிறதா?

அ.தி.மு.க-வில் ஐக்கியமான அடுத்த பா.ஜ.க நிர்வாகி - மோதல் முற்றுகிறதா?
அ.தி.மு.க-வில் ஐக்கியமான அடுத்த பா.ஜ.க நிர்வாகி - மோதல் முற்றுகிறதா?

பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க இடையே மோதல் முற்றத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க-வில் இருந்து சி.டி.நிர்மல்குமார் விலகி அ.தி.மு.க-வில் இணைந்ததை தொடர்ந்து,  தற்போது மேலும் ஒரு நிர்வாகி விலகியிருப்பது பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி இடையே மோதலை தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
'பா.ஜ.க-வுடனான கூட்டணியால்தான் நாம் அதிமுக ஆட்சியை இழந்தோம், ஆகவே, பாஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம்' என முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.வி.சண்முகம் எனப் பலரும் தொடர்ந்து பேசி வந்தனர். இதன் காரணமாகத்தான் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க  தனித்து போட்டியிட்டன. இருந்தபோதிலும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்வதாக இரு தலைமைகளும் அவ்வப்போது பேசி உறுதிப்படுத்தி வந்தன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, பா.ஜ.க-வின் கொடி, தலைவர்களின் படம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை அ.தி.மு.க தவிர்த்தது. 
இந்நிலையில், தமிழக பா.ஜ.க ஐ.டி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார் எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க-வில் இணைத்து கொண்டதற்கு, பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிர்மல்குமாரை தொடர்ந்து தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு செயலாளர் திலீப் கண்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தொடர்ந்து, சென்னை பசுவழிசாலையில் உள்ள எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு செயலாளர் திலீப் கண்ணன் உள்பட மேலும் சில பாஜக நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக்  கொண்டனர்.
'கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதுபோன்ற செயல்களை அ.தி.மு.க செய்வதை ஏற்று கொள்ள முடியாது' என பா.ஜ.க தரப்பு கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க இடையே மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க-வில் இணைவதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க-வில் இருந்தும் சில முக்கிய நிர்வாகிகளை பா.ஜ.கவில் இணைக்கும் வேலைகள் வரும் நாள்களில் நடக்க உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com