தென்மண்டலத்தில் இடைத்தேர்தல் நடந்திருந்தால்... எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயலலிதா உதவியாளர்

தென்மண்டலத்தில் இடைத்தேர்தல் நடந்திருந்தால்... எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயலலிதா உதவியாளர்
தென்மண்டலத்தில் இடைத்தேர்தல் நடந்திருந்தால்... எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்த ஜெயலலிதா உதவியாளர்

தலைவராக இருப்பவர் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

இதே இடைத்தேர்தல் தென் மண்டலத்தில் நடந்திருந்தால் நீங்கள் எவ்வளவு ஓட்டு வாங்கி இருப்பீர்கள்? என ஜெயலலிதாதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் கேள்வி எழுப்பி உள்ளார்.  
இதுகுறித்து அவர், ‘’இடைத்தேர்தல் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய தோல்வி அல்ல, உண்மைதான்; அம்மா அவர்கள் இருக்கும்போதும் இடைத்தேர்தலில் தோல்வியுற்று இருக்கிறார்கள், உண்மைதான்; ஆளும் கட்சி தான் தேர்தலில் ஜெயிக்கும், உண்மைதான்; வெற்றி பெற்றால் விடா முயற்சி, தோல்வியுற்றால் வீண் முயற்சி என்பார்கள், உண்மைதான்; பணம் ஜெயித்திருக்கிறது. உண்மைதான்.
என்னுடைய கேள்வி எல்லாம் கொங்கு மண்டலத்தில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். இதே தேர்தல் தென் மண்டலத்தில் நடந்திருந்தால் நீங்கள் எவ்வளவு ஓட்டு வாங்கி இருப்பீர்கள் என்பது தான். இந்த கணக்கு அவசியமான ஒன்று. ஏனென்றால் ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அரவணைக்க வேண்டும். ஆட்சி அமைக்க ஒரு சாரரை நம்பி பயணம் செய்யக் கூடாது. எல்லோருடைய ஆதரவும் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு நல்லது. நான் சொல்லும் கருத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பதவிக்காக துதிபாடிக் கொண்டிருப்பவர்கள் என்னை வசை பாடுவார்கள். கொங்கு மண்டலம் தலைவர் காலத்திலிருந்து செல்வாக்கு பெற்ற மண்டலம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. எப்போதும் கழகத்திற்காக ஓட்டுக்களை இரட்டை இலையில் பதிப்பவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
தலைவராக இருப்பவர் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதற்கான காரியத்தை முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால் கழகம் நன்றாக இருக்கும் என்பது தான் தொண்டர்களுடைய நம்பிக்கை. அதுவே என்னுடைய வேண்டுகோளும். அதிமுக_விற்கு ஆசைப்படுபவர்களால் உன் உயிருக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று என் நண்பர்கள் சொல்வார்கள். நீங்கள் பிரிந்திருந்தால் தான் எனக்கு நல்லது. நீங்கள் சேர்ந்து விட்டால் என்னைத்தான் முதலில் வம்புக்கு இழுப்பீர்கள். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னை வளர்த்த கழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் பேசி, தொண்டர்களின் ஆலோசனைகளை கேட்டு, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயற்சி செய்யுங்கள். கழகம் வலிமை பெற வேண்டும். புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி அம்மா வழியில் நடைபெற வேண்டும் என்பதே என் அவா. யாரையும் குறை சொல்வதாக நினைத்து விடாதீர்கள். நீங்கள் எல்லோரும் எனக்கு வேண்டியவர்கள். நீங்கள் எல்லோரும் எனக்கு ஒன்றுதான். உங்களிடமிருந்து ஒரு ஓட்டு பிரிந்து சென்றாலும் அது உங்களுக்கு பின்னடைவைத்தான் தரும். அவரவர் கட்சியை வளர்க்கத்தான் அவரவர்கள் ஆசைப்படுவார்களே தவிர, அடுத்தவர் கட்சியை வளர்க்க ஆசைப்பட மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com