எங்களைச் சந்திக்காமல் புறக்கணித்ததற்கான காரணம் தெரியவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க விரும்பிய பல்வேறு மாநில விவசாய சங்க பிரதிநிதிகளை அறிவாலயத்தில் காக்க வைத்து அவமானப்படுத்திவிட்டதாகக் கூறுகிறார், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்.
'என்ன நடந்தது?' என பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டோம். ''டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தி கிசான் யாத்திரையை நடத்துகிறோம்.
இந்த யாத்திரை கடந்த 2ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது. ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் வழியாக வரும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி டெல்லியில் நிறைவு பெற உள்ளது.
இதனால், எங்கள் குழுவினர் செல்லும் வழியில் அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்து வருகிறோம். அந்தவகையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கவேண்டி இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பினோம். அவர், 'உடனே வாருங்கள்' என அழைப்புவிடுத்து நேரில் சந்தித்து எங்கள் குறைகளைக் கேட்டார்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க 15 நாட்களுக்கு முன்னதாகவே அவரது உதவியாளர் மற்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து இப்பயணம் குறித்து விரிவாகக் கூறினோம். மேலும், 'முதல்வரை சந்திக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும்' என்று வலியுறுத்தினோம். அவரும் முயற்சி செய்வதாக கூறினார்.
இந்த நிலையில் 3-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவேண்டும் என்பதற்காக 2-ம் தேதி மாலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடனான சந்திப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தோம். அறிவாலயத்தில் முதலமைச்சர் இருப்பதை அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றோம்.
நாங்கள் வந்திருப்பதை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் விரைவில் அவர் அழைப்பார் எனத் தெரிவித்தனர். நீண்டநேரம் வெயிலில் காத்திருந்ததால், பஞ்சாபில் இருந்து வந்திருந்த விவசாய சங்க தலைவர்கள் எங்களைக் கடிந்து கொண்டனர். தி.மு.க நிர்வாகிகளிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. முதலமைச்சரையும் எங்களால் சந்திக்க முடியவில்லை. எங்களைச் சந்திக்காமல் புறக்கணித்ததற்கான காரணம் தெரியவில்லை.
'சந்திக்க வாய்ப்பில்லை' என முன்கூட்டியே தெரிவித்திருந்தால் வந்திருக்கவே மாட்டோம். இது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் அவமானப்படுத்தும் செயல்'' என்றார்.
விவசாயிகளின் புகார் குறித்து, தி.மு.க-வின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயனிடம் பேசினோம்.
''விவசாயிகள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதைக்கேட்டு நிவர்த்தி செய்து வருபவர் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது மக்கள் பணியை பல்வேறு மாநில முதல்வர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சரின் உழைப்பை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள விவசாயிகள் போற்றுகின்றனர். காரணம், வேளாண் பட்ஜெட் போடும்போது விவசாயிகளிடம் கேட்டுத்தான் அரசு செய்கிறது.
ஒரு மாநில முதல்வர் என்பவர் பல்வேறு அரசு பணிகளுக்கு மத்தியில் நேரப் பற்றாக்குறையால் இயங்கிவருபவர். அப்படி இருக்கையில், சந்திப்புக்கான நேரத்தை முன்கூட்டியே பெற்று வந்திருதிக்கவேண்டும். அதுதான் சரியான நடைமுறை. அதைவிடுத்து, 'எடுத்தேன்.. கவிழ்த்தேன்' என செயல்படக்கூடாது. இதை பி.ஆர்.பாண்டினுக்கு எப்படி புரியவைப்பது என தெரியவில்லை.
அவர் தி.மு.க. மீதுள்ள கோபத்தில் பொய் சொல்கிறார். மேலும், அவர் சமீபகாலமாக உள்நோக்கத்துடன் நடந்துகொள்கிறார். இதைத்தாண்டி நான் வேறு ஏதும் சொல்லவிரும்பவில்லை'' என்றார் விரிவாக.