சிறுபான்மையின வாக்குகளை மொத்தமாக இழந்த அ.தி.மு.க - ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

சிறுபான்மையின வாக்குகளை மொத்தமாக இழந்த அ.தி.மு.க - ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
சிறுபான்மையின வாக்குகளை மொத்தமாக இழந்த அ.தி.மு.க - ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பாஜகவுக்கும் தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என அ.தி.மு.க காட்டிக் கொண்டாலும், அதனை மக்கள் ஏற்று கொள்ளவில்லை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றுள்ள வெற்றி, அ.தி.மு.க வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'சிறுபான்மையின மக்களின் வாக்குகளை அ.தி.மு.க முற்றிலும் இழந்துவிட்டது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்தமுறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு திமுக அமைச்சர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியை பொறுத்தவரை முதலியார் சமூகத்தினர் வாக்காளர்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என சிறுபான்மை வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். அதாவது சுமார் 40 ஆயிரம் சிறுபான்மை வாக்காளர்கள் உள்ளனர்.
இதன் காரணமாகவே பா.ஜ.க கொடியைக்கூட அ.தி.மு.க தனது தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தவில்லை. என்னதான் பாஜகவுக்கும் தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என அ.தி.மு.க காட்டிக் கொண்டாலும், அதனை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஈரோடு கிழக்கில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாக்குச்சாவடி எண் 3, 9, 10, 15, 18 ஆகிய   பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதில் பூத் எண் 3-ல் 1266 வாக்குகளில் 956 வாக்குகள் பதிவானது. இதில் 798 வாக்குகளை இளங்கோவன் பெற, வெறும் 87 வாக்குகளை மட்டுமே தென்னரசு பெற்றுள்ளார். 
இதேபோன்று பூத் எண் 13-ல் இளங்கோவனுக்கு 642 வாக்குகளும் தென்னரசு 106 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இதில் 536 வாக்குகளை இளங்கோவன் பெற்றார். இதேபோன்று மற்ற வாக்குச் சாவடிகளிலும் இளங்கோவனுக்கு சிறுபான்மையின மக்கள் அதிகளவில் வாக்குகளை அளித்தது தெரிய வந்துள்ளது. 
குறிப்பாக, பூத் எண் 3 உள்ள பகுதியில்தான் அமைச்சர் நாசர் மகன் ஆஸிம் ராஜாவின் மாமனார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தென்னரசுவுக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல். மொத்தமாக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என ஒட்டுமொத்த சிறுபான்மை சமுதாய மக்களும் அதிமுகவை புறக்கணித்துள்ளது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.
- பாபு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com