ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த நாம் தமிழர் கட்சி - சீமான் பேச்சுதான் காரணமா?

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த நாம் தமிழர் கட்சி - சீமான் பேச்சுதான் காரணமா?
ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த நாம் தமிழர் கட்சி - சீமான் பேச்சுதான் காரணமா?

"வந்தேறி என்ற வார்த்தை தவறான வார்த்தை அல்ல"

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா டெபாசிட்டை இழந்துள்ள சம்பவம், அக்கட்சியின் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். அவர், 67,300 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக த.மா.கா சார்பில் போட்டியிட்ட யுவராஜா 58,396 வாக்குகளைப் பெற்றார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் என்பது 8,904 ஆக இருந்தது. 

இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். ஆனால், இந்தமுறை வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தார். 

''நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட்டை இழக்க என்ன காரணம்?'' என தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையாவிடம் கேட்டோம். ''ஈரோடு கிழக்குத் தொகுதியில் குறிப்பிட்ட சாதியின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக சீமான் அறிவித்தார். அடுத்ததாக, ஒரு சமூக மக்களை உயர்த்தியும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களைத் தாழ்த்தியும் பேசி பரப்புரை செய்தார். 

தேர்தல் பிரசாரத்தின்போது, தங்கள் கட்சியின் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் மக்களிடம் முன்வைக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வந்தேறிகளாக சித்தரித்து சீமான் பேசியது அம்மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அதற்கான பாடத்தை இந்தத் தேர்தலில் மக்கள் கொடுத்துள்ளனர்'' என்கிறார். 

நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஹூமாயூனிடம் கேட்டபோது, ''ஆளும்கட்சி சார்பில் ஒரு வாக்காளருக்கு  68 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்துள்ளனர். பட்டுப்புடவை, வேஷ்டி, வாட்ச், குக்கர், மிக்ஸி என அள்ளிக் கொடுத்தனர். அத்துடன் ஒரு வாக்குக்கு 15,000 ரூபாய் என வாரியிறைத்தனர். 

ஒரு வார்டுக்கு 2 எம்.எல்.ஏ-க்கள், ஒரு எம்.பி. ஓர் அமைச்சர் எனப் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர். சுமார் 120 இடங்களில் பந்தல் போட்டு, காதணி விழா நடத்தி 3 வேளையும் மட்டன், சிக்கன், ஆடல், பாடல், சினிமா என  அரங்கேற்றம் நடத்தி போலியான வெற்றியை பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளனர்'' என்கிறார். 

தொடர்ந்து பேசியவர், '' காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறவில்லை. 12 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, கோடிகளைக் கொட்டி வெற்றியை விலை கொடுத்து வாங்கியுள்ளார். நாங்கள் களத்தில் நிராயுதபாணியாக மக்களை நம்பி நின்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளோம். 

கடந்த 2016 தேர்தலில், 'உருது முஸ்லீம்களை பாஸ்கிஸ்தானுக்கு சீமான் போகசொல்லிவிட்டார்'  என்று எப்படி வதந்தி கிளப்பினார்களோ அதேபோல, ஈரோடு இடைத்தேர்தலில், 'அருந்ததியர்கள் தமிழர்கள் இல்லை' என சீமான் அவமானப்படுத்திவிட்டதாக வதந்தி கிளப்பிவிட்டனர். வந்தேறி என்ற வார்த்தை தவறான வார்த்தை அல்ல. 

இங்கு வந்து குடியேறியவர்களை வந்தேறி எனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அருந்ததியர்களை கொச்சைப்படுத்தவில்லை. அவர்கள் மனதைக் காயப்படுத்தவில்லை. நிகழ்வைச் சொன்னோம், வரலாற்றை சொன்னோம். சீமான் எந்த இடத்திலும் தவறு செய்யவில்லை. உண்மையை மட்டுமே சொன்னார். தெலுங்கர்கள் பலர் தங்களது சுயபெயரை மறைத்துக்கொண்டு, தமிழில் பெயரை வைத்துக்கொண்டு, தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களை விரைவில் அடையாளப்படுத்துவோம்'' என்கிறார். 

மேலும், ''இடைத்தேர்தலில் பொசிட் பறிபோனதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்த தேர்தல் எப்படி நடந்தது என அனைவருக்கும் தெரியும். நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த ஒவ்வொரு வாக்குகளும் காசு, பணம் கொடுக்காமல், அண்ணன் சீமானுக்காக விழுந்த வாக்குகள். அவை நேர்மைக்கும் உண்மைக்கும் கிடைத்த வெகுமதி'' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com