'ஈவிகேஎஸ் இளங்கோவன் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்'
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தற்போது, ஈரோடு கிழக்கில் 7ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 6ஆம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 53,548 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 19,936 வாக்குகளும்,, நாம் தமிழர் வேட்பாளர் 2,964 வாக்குகளும் , தேமுதிக வேட்பாளர் 431 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுகவினர் அதனை பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி, "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது" என்றார்.
"ஈவிகேஎஸ் இளங்கோவன் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கில் பதிவான 398 தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 250 வாக்குகளும், அதிமுகவின் தென்னரசுவுக்கு 104 வாக்குகளும் கிடைத்தன. நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகளும், தேமுதிகவுக்கு ஒரு தபால் வாக்கும் கிடைத்துள்ளது.