காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே எஸ் அழகிரி, "தமிழ்நாடு அரசு ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உள்ளது. எனவே, மக்கள் எங்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்.
எங்களை எதிர்த்து நிற்கிற அதிமுக சஞ்சலத்தில் உள்ளது. அவர்களால் அவர்களுடைய அணியை ஒழுங்குபடுத்த முடியவில்லை. தன்னம்பிக்கை இல்லாத அதிமுக கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார். இனி எல்லாமே மாறும் என்றும், 2024ல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்று டெல்லியை அலங்கரிக்கும் என்றும் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.