காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும், அது கரை சேராது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது, 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.அவருக்குப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்படப் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா,உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, ஈவேரா ராமசாமி என்னும் நான் திராவிட சமுதாயத்தை மானமும், சுயமரியாதையும் உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை தன்மேல் போட்டுக்கொண்டு புறப்பட்டார். இந்த அண்ணாதுரையால் என்ன சாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்கள். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ அனைத்தையும் இந்த அண்ணாதுரையால் சாதிக்க முடியும் என்று தான் எழுந்து நின்றார்.
ஸ்டாலின் எனும் பெயருக்குள் கோடிக்கணக்கான உயிர்கள், உடன் பிறப்புகள் அடங்கி இருக்கிறது.வீட்டுக்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன். மக்களின் கவலைகளை ஒருவனாக எனது சக்தியை மீறி உழைப்பேன். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, அரங்கத்தில் இருக்கும் உங்களை எல்லாம் சேர்த்து தான் நான் என்று குறிப்பிட்டு பேசினார்.
16 வயதில் மக்கள் பணியாற்ற தொடங்கினேன் .கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வந்தேன்.சிறைச்சாலை தான் எனது பாசறையாக இருந்தது.அண்ணாவை போல் எனக்கு பேசத்தெரியாது. கலைஞரை போல் எழுத தெரியாது.ஆனால் அண்ணாவையும், கலைஞரையும் போல எனக்கு உழைக்கத் தெரியும் என்றார்.
எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.எனது பயணம் நீண்ட நெடிய பயணம். பிறந்தநாளை பற்றி சொல்லும் போது தான் எனக்கு வயது நினைவுக்கு வருகிறது.வயது என்பது மனதை பொருந்தது, இளமை என்பது முகத்தில் இல்லை மனதில் உள்ளது. தொண்டர்கள் என்னுடன் வருவதால், நாளுக்கு நாள் நான் இளமையாக மாறுகிறேன்.
திமுகவை எப்போதும், நிரந்தரமாக ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன்.திராவிட இயக்கத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கொள்கையை பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி என்று கூறினார். மேலும் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுவிட்டன.மீதமுள்ள வாக்குறுதிகள் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேற்றப்படும்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் நான் செய்வேன். ஒருமித்த கருத்து கொண்ட கட்சியுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காக தேர்தல், 2024 தேர்தல் என்று தெரிவித்தார்.
நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்க காரணம் ஒற்றுமை தான். காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும், அது கரை சேராது.பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைவரும் தேர்தல் கணக்குகளை புரிந்து கொண்டு ஒன்றிணைய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்பது 8 கோடி மக்களை ஏமாற்றும் செயல்.
சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குகிறார்கள், ஆனால் தங்க தமிழுக்கு வெறும் கையை வீசுகிறார்கள்.மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால், அதை தடை செய்ய மறுக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவின் நீண்ட கால நோக்கங்களை புரிந்து கொண்டு, கொள்கை போர் நடத்தி வருகிறோம்.வெற்றிக்கான விதையை இப்போதே விதைப்போம். 2024 தேர்தலில் 40 தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். 40 நமதே, நாடும் நமதே என்று தெரிவித்தார்.