எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது, 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்குப் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்கச் சென்னை வந்துள்ள ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து, முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார். அவர் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்.எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.