திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி வருகை பதிவேட்டில் கமல் ஹாசன் எழுதும் போது மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாகத் தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர். அவரின் படிப்படியான உயர்வைப் படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் என்று அவர் எழுதினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து கமல் ஹாசன் கூறியதாவது," இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் இன்று நான் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வந்துள்ளேன்.முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞரின் மகன் என்ற காலத்திலிருந்தே எனக்குத் தெரியும். எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், படிப்படியாக உயர்ந்து தனது திறமையால் உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார். இதை எல்லாம் ஏற்பாடு செய்தவர் அமைச்சர் சேகர்பாபு என்று பேசினார்.பின்னர் தயாநிதி மாறனைப் பற்றிப் பேசும் போது சட்டமன்ற உறுப்பினர் என்று கூறினார். அதற்கு, அருகிலிருந்த தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினர் எனக் கூறியதும் சுதாரித்து அதை மாற்றிக் கூறினார்.
பின்னர், திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு "அதை இப்போது சொல்ல முடியாது; கதையில் சீன் பை சீனாகத்தான் தெரியும்; கிளைமேக்ஸ் எல்லாம் உடனடியாக தெரியாது என்றும் " கூறியுள்ளார்.