குரூப் 2 தேர்வு குளறுபடி தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு துறைகளில், ‘குரூப் 2, 2ஏ’ பணிகளுக்காக தற்போது நடைப்பெற்ற தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தேர்வு எழுதியவர்கள் மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையாலும், அலட்சியப்போக்காலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு துறைகளில், ‘குரூப் 2, 2ஏ’ பணிகளில் காலியாக உள்ள, 5,446 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக கடந்த ஆண்டு மே, 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடந்தது. இதில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் கடந்த நவம்பர் மாதம் முடிவுகள் வெளியாகின. இதில் தேர்வான 55,000 பேர்களுக்கு நேற்று குரூப் 2 பிரதான தேர்வு நடைபெற்றது. இந்த பிரதான தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.