ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் மெய்ப்பிக்கும் என்பது சத்தியம்... மருது அழகுராஜ் நம்பிக்கை..!

முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை பதுக்குவதற்கும் முதலீடு செய்வதற்குமான முதலீட்டு சந்தையாக அரசியல் மாற்றப்பட்டிருப்பது பெருத்த அவமானம் என ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மருது அழகுராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வந்திருக்கும் இடைத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் அது ஒரு அரசியல் மாற்றத்திற்கு புறப்பாடு செய்யும் என்பது நிச்சயம். எளிய மக்கள் ஓட்டு மட்டுமே போடமுடியும் என்பதல்ல ஜனநாயகம். அந்த எளிய மக்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என்றால் தான் அது ஜனநாயகம் என்றவர் புரட்சித் தலைவர். ஆனால், இன்றோ குறைந்த பட்சம் இருபது கோடி செலவு செய்யும் அளவுக்கு முறைகேடான வழியில் பணம் குவித்து வைத்திருப்பவர்கள் முதலைகள் மட்டும் தான் வேட்பாளர்களாக நிற்க முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
இது ஒரு ஜனநாயக அழிவு என்றே சொல்ல வேண்டும். தி.மு.க.விலும் சரி எடப்பாடி ஆதரவு அ.தி.மு.க.விலும் சரி கத்தை பணத்தை வைத்துக் கொண்டு தலைமைக்கு கப்பம் கட்டுபவர்கள் மட்டுமே அங்கே பிரதான பிரமுகர்களாக இருப்பது வெட்ட வெளிச்சம். தி.மு.க வில் குடியேறிய முன்னாள் அ.தி.மு.க.வினர் அனைவருக்கும் அங்கு முன்னுரிமையும் முதல்மரியாதையும் கிடைத்துவிடவில்லை. மாறாக
செந்தில் பாலாஜி, ராஜ.கண்ணப்பன் போன்ற கொழுத்தவர்கள் மட்டுமே அங்கு கொண்டாடப் படுகிறார்கள்.
அது போலவே எடப்பாடி ஆதரவு அணியிலும் கரன்சி குவியலை கொண்டிருக்கும் தங்கமணி வேலுமணி விஜயபாஸ்கர்கள் போன்றவர்கள் மட்டுமே முன் வரிசை முகங்களாக்கப்படுகின்றனர். ஆக, தி.மு.க. மற்றும் எடப்பாடி அணி இரண்டுமே எங்களிடம் எளியோருக்கான அரசியல் இல்லை என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகின்றனர். எங்களிடம் எளிய மக்களுக்கும் தொண்டுள்ளம் கொண்ட சாமானியர்களுக்கும் வாய்ப்பு இல்லை ராஜா என்பதை மிக வெளிப்படையாக அவர்கள் உணர்த்துகின்றனர்.
இது ஆபத்தான போக்காகும். முறைகேடான வழியில் சம்பாதித்த பணத்தை பதுக்குவதற்கும் முதலீடு செய்வதற்குமான முதலீட்டு சந்தையாக அரசியல் மாற்றப்பட்டிருப்பது பெருத்த அவமானமாகும். அது மக்களின் வரிப்பணத்திலான அரசு சொத்துக்களை அரசியல் எனும் பேரில் சூறையாடுகிற பயங்கரவாதமாகும். இந்த நிலையை மாற்றி எளிய மக்கள் கையில் அதிகாரம் சாமானிய தொண்டனுக்கும் சம வாய்ப்பு என்னும் பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோரது லட்சியங்களுக்கு வடிவம் கொடுக்கும் உயரிய ஜனநாயகத்தை ஓ.பி.எஸ் முன்னெடுத்து வருகிறார்.
தொண்டரிகளின் உரிமைக்கும், தூய்மையான அரசியலை விரும்பும் எளிய மக்களின் பங்கேற்புக்கும் அவர் போடும் புதுப் பாதையை பெரியார் உதித்த ஈரோட்டு மண்ணில் இருந்து தொடங்குவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எளியவர் கரங்கள் இணையும் போது அது எரிமலையினும் வலிமையாகும். இதனை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் மெய்ப்பிக்கும் என்பது சத்தியம். மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வைரங்கள் பூமிக்கு மேல் வந்து முகம் காட்டிச் சிரிக்கும் பொற்காலத்தை படைக்க தொண்டர்களையும் மக்களையும் திரட்டுவோம் வாருங்கள் தோழர்களே ஒன்றாய் கூடுங்கள் தோழர்களே’’என அழைப்பு விடுத்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
