சசிகலாவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு தள்ளுபடி : உயர்நீதிமன்றம்

சசிகலாவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு தள்ளுபடி : உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்கக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை   ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கைத் தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து  சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் நிராகரிப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்