தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி
தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சினை வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 5000 ரூபாயும், கரும்பும் சேர்த்து வழங்க அதிமுக வலியுறுத்தியது. அதன்படி, அந்த கோரிக்கையை ஏற்றுக் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி முடங்கிப் போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளை சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாகவும், ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.
துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர்.
இதனால், 90 % நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.