பன்னீர் செல்வம் கண்ணீர் செல்வமாக மாறியுள்ளார் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து

பன்னீர் செல்வம் கண்ணீர் செல்வமாக மாறியுள்ளார் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து

பன்னீர் செல்வமாக இருந்த ஓபிஎஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறியுள்ளதாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமாக உள்ள ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 

"அதிமுகவிற்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் வேண்டுகோளாக உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை பொது செயலாளராக அறிவிக்கவுள்ளோம். தமிழகத்தின் தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தென்மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும், ஓ.பி.எஸ். கடந்த தேர்தலில் தனது தொகுதியை தவிர வேறு எந்த அதிமுக வேட்பாளர்களுக்காகவும் வாக்கு சேகரிக்க வரவில்லை. அவர் தனது சுயநலம் கருதி தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ளார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள், துதி பாடுபவர்கள் அதிமுகவின் தலைமை பதவியை ஏற்க முடியாது.

மூன்று முறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் தென் மாவட்டங்களில் எந்தவித திட்டங்களையும் கொண்டுவரவில்லை. ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக கூறுகிறார், அதனை அவர் முயன்றிருந்தால் தடுத்திருக்கலாம். அதே சமயம், அதிமுகவில் 95 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு இ.பி.எஸ் தரப்பிற்க்கே உள்ளது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் மிக சிறந்த தலைமையாக செயல்பட்டு வருகிறார். அதனால், தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்து விலகி செல்ல வேண்டும். அதேபோல், பன்னீர் செல்வமாக இருந்த ஓ.பி.எஸ். தற்போது கண்ணீர் செல்வமாக மாறியுள்ளார். 

அதிமுக நிர்வாகம் சுகந்திரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பதவியை யாரும் அங்கீகரிக்க தேவையில்லை. எனவே, ஓ.பி.எஸ்-யை பதவி நீக்கம் செய்வதற்கு முன்பு தாமே பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வம் தென் மாவட்டங்களின் எந்தவித தலைமை பொறுப்பிலும் இல்லை. அவரை போல பல தலைவர்கள் உருவாக காத்திருக்கிறார்கள். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். பன்னிர் செல்வத்திற்கு ஒருங்கிணைக்கும் தகுதி இல்லை." என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்