பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு... கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றம்...!

பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு... கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றம்...!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கொண்டுவந்த அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி கூறியதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை, வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்உசேன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பொதுக்குழு கூட்டதிற்கு மேடைக்கு வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பொதுக்குழுவிற்கு வந்த ஓபிஎஸ் வாகனத்தை வெளியே எடுக்க சொல்லி பலர் கூச்சம் போட்டனர். 

பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அரங்கிற்கு வந்த ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை. இருந்தாலும் அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைசெல்வன் ஆகியோர் கழக நிர்வாகிகளை அமைதி காக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொதுக்குழு அரங்கிற்குள் நுழைந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

இதனையடுத்து தனித்தனியாக மேடை ஏறிய ஓபிஎஸ், ஈபிஎஸ் அனைவருக்கும் வணக்கம் செலுத்தினர். அப்போது தொண்டர்கள் ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று தொடர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மேடையில் இருந்த மைக்கில் முன்னாள அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக பேசினார். அதனை தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமியும் இதே கருத்தை தெரிவித்தார். 

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பானதாக பொதுக்குழு நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். கூட்டத்தை விட்டு வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் காகிதங்கள் வீசியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்