அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்புதான் இந்த தீர்ப்பு - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பேட்டி

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்புதான் இந்த தீர்ப்பு - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பேட்டி

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்புதான் இந்த தீர்ப்பு என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ஓ.ரவீந்திரநாத் கூறியுள்ளார். 

பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இந்த மனுவானது இரவோடு இரவாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோரும், பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன் , திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர்.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும், பொதுக்குழு நடத்த தடை விதிக்க கூடாது என ஈபிஎஸ் தரப்பும் விடிய விடிய விவாதம் நடத்தினர். இதனை விசாரித்த நீதிபதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கினார். அதில், பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தலாம்; பொதுக்குழுவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்தி மூன்று வரைவு தீர்மானங்களை தவிர கூடுதல் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனால் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்ற மகிழ்வில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இது தொட்ர்பாக  நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் மகனுமான ஓ.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில் “மேல்முறையீட்டு தீர்ப்பு என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கியது நீதிபதிகளாக இருந்தாலும் அதில் ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னோருவர் ஜெயலலிதா என்று கூறினார். மேலும், இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு எழுச்சி மிகுந்த தீர்ப்பாக இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரம் ஒரு தொண்டனாக வருத்தம் அளிப்பதாக கூறிய அவர் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்