அதிமுக பொதுக்குழு: புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுக பொதுக்குழு: புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதனால் மண்டபத்தில் மிகப்பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது.

அதில், புதிய நியமனங்கள் குறித்து ஆலோசிக்கக் கூடாது; அதிமுக தீர்மானக் குழுவில் 23 தீர்மானங்களுக்கு மட்டுமே ஒப்புதல் கொடுத்துவிட்டேன். ஒற்றை தலைமை குறித்த புதிய தீர்மானம் இல்லை; அதனால் அதை பற்றி பேசக்கூடாது. புதிதாக தீர்மானத்தை சேர்க்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தில் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்; புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதிக்க முடியாது என்ற வாதம் வைத்தது. வழக்கின் இறுதி தீர்ப்பாக உயர்நீதிமன்ற தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது; பொதுக்குழுவிற்கு தீர்மானங்கள் நிறைவேற்ற அதிகாரம் உள்ளது; பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டால் அது பாரம்பரியமாக இருக்காது என உத்தரவிட்டது. இதனால் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இதனால் இரவோடு இரவாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி  வீட்டில் விசாரணை நடைபெற்றது. நள்ளிரவு 2.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற விசாரணையின் முடிவில், பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். பொதுக்குழுவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருபத்தி மூன்று வரைவு தீர்மானங்களை தவிர கூடுதல் தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்ற மகிழ்வில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமன்றி பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோரும், பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன் , திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். விசாரணையையொட்டி நீதிபதி வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே தீர்ப்பு வெளியாகியிருந்தாலும் ஒற்றை தலைமையில் மாற்றம் இல்லை என முன்னாள் அமைச்சரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்