சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த திமுக அரசு? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த திமுக அரசு என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பாஜக பிரமுகர் பாலச்சந்தரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் “தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர் கொலைநகராக மாறி இருக்கிறது என நேற்று நான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மாலையே சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். இது சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீதான அச்சம் முற்றிலும் போய்விட்டதையும் அதன் காரணமாகவே சட்டத்திற்கு புறம்பான செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதையும் அப்பட்டமாக காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கிறதா இந்த விடியா அரசு?” என்று குறிப்பிட்டுள்ளார்.