உணவில் ஊழல் செய்பவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? - பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் கேள்வி

ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்களில் ஊழல் செய்பவர்கள் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமை பொருட்களில் வண்டுகளும், புழுக்களும் காணப்படுவதோடு, பழுப்பு ஏறிய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.காஞ்சிபுரம் நகரில் உள்ள பல கடைகளிலும் இதே சூழ்நிலை காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன் வாலாஜாபாத் வட்டத்திலும் பல கடைகளில் இதே போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதை கண்டித்து பல விற்பனையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களில் இவ்வளவு பெரிய மோசடி நடப்பது கொடுஞ்செயல். ஏழை எளிய மக்களின் உணவில் ஊழல் செய்யும் அற்ப புதர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது அதை விட கொடுமையானது. குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் வேலை பார்ப்பவர்களே இதற்கு காரணம் என்று பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்து விட்டு கை கழுவி விடலாம் என தமிழக அரசு நினைக்க கூடாது. இந்த பொருட்கள் காஞ்சிபுரம், சிறு காவேரிப்பாக்கம் அரசு கொள்முதல் நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கொள்முதல் நிலையத்திலுள்ள உணவு பொருட்களை சோதனையிடுவதோடு, அந்த நிலையத்திற்கு பொருட்களை அளித்த நிறுவனங்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமே பொறுப்பேற்க வேண்டும். தொடர்புடைய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உணவுப்பொருட்களில் மோசடி என்பது கடும் குற்றம். இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். உணவில் ஊழல் செய்யும் கேடுகெட்ட கொடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமை. அப்படி இல்லையேல், இந்த ஊழலில் தமிழக அரசே ஈடுபட்டுள்ளது என்றே பொருள் கொள்ளப்படும். துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?” என கூறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Ops -க்கு திமுக செக்....
