பேரறிவாளன் விடுதலை விவகாரம் : மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரம் : மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு கடந்த முறை நாகேஸ்வர ராவ் கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த அமர்வு பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டியது. மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளனை நன்னடத்தை, உடல்நலம் மற்றும் அதிகாரப் பிரச்சனையை கருத்திகொண்டு ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியது. அதோடு மட்டுமல்லாமல் பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கம் என்று கூறி வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தது. மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் குடியரசுதலைவர் முடிவெடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் நாகேஸ்வர ராவ் கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆளுநர் தரப்பில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூற நீதிமன்றத்தின் நேரத்தை மத்திய அரசு வீணடிப்பதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசு வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், இவ்வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம். ஆனால் எந்த விதியின் கீழ் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார். பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்கே உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார். எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக நீங்கள் (மத்திய அரசு வழக்கறிஞர்) வாதிடுகிறீர்கள்? ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு இல்லை. ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்துள்ளதால் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். 

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலை வழக்குகளின் தண்டனை மீதும் கருணை காட்டும் முடிவை எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே சென்று விட்டால், ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161 என்ற பிரிவு எதற்கு, அது அரசியலமைப்பில் தேவையில்லயா? அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும்போது, அதில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஆளுநர் செலுத்த முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என மத்திய அரசு தெரிவித்தது. இந்திய தண்டனை பிரிவு 302 மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் இருக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இவ்வாறு மத்திய அரசு தரப்பு, தமிழக அரசு மற்றும் பேரறிவாளன் தரப்பு தங்கள் வாதங்களை காரசாரமாக உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்திருந்த நிலையில் வழக்கை விசாரித்த அமர்வு இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. மேலும், இவ்வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்